இந்தியா
எல்.முருகன், அண்ணாமலை அமைச்சர் ஆகிறார்களா? பரபரப்பு தகவல்

மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட மத்திய அமைச்சராக இல்லை என்பதால் தமிழகத்தைச் சார்ந்த இருவருக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
தமிழகத்தின் சார்பில் பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்தது. அதேபோல் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எல் முருகன், அண்ணாமலை இருவருமே சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தாவர்சந்த் கெலாட், சந்தோஷ் கங்வார் ஆகியோர் ராஜினாமா செய்திருப்பதாகவும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண் அமைச்சர்களுக்கு அதிக இடம் கிடைக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது. சற்றுமுன் பாஜக துணை தலைவர் சோபா கராண்ட்லஜே, பிரீத்தம் முண்டே, ஹீனா கவித் ஆகியோர் பிரதமர் அலுவலகம் வந்ததாகவும் இவர்கள் மூவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் தெரிகிறது.
மேலும் எஸ்சி பிரிவிலிருந்து 12 பேரும், எஸ்டி பிரிவிலிருந்து 8 பேரும் ஓபிசி பிரிவிலிருந்து 27 பேரும் சிறுபான்மையினர் 5 பேருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு என கூறப்படுகிறது. அதேபோல் சீக்கியர், கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும், புத்த மதத்தினர் இருவரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.







