தமிழ்நாடு
“சசிகலா இல்ல… எந்த கொம்பனாலும் முடியாது..!”- செக் வைக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உடைக்க சசிகலா, தினகரன் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்று சவால் விட்டுள்ளார் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தற்போது அவர் பெங்களூருவில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்த வாரம் அவர் எப்படியும் தமிழகத்துக்கு வருவார் என்றும், அதற்கு அவரது ஆதரவாளர்கள் மிகப் பெரும் வரவேற்பைக் கொடுப்பாள்கள் என்றும் கூறப்படுகிறது. சசிகலா மீண்டும் தமிழக அரசியலில் காலெடுத்து வைத்தால், அவர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என்று பரவலா சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவரின் இணைப்பு குறித்தும், டிடிவி தினகரின் இணைப்பு குறித்தும் சில நாட்களுக்கு முன்னர் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘சசிகலா, அதிமுகவின் உறுப்பினரே இல்லை. அப்படிப்பட்டவரை எப்படி நாங்கள் மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை மறு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி சசிகலா, தன் உறுப்பினர் சேர்க்கையை மறு பதிவு செய்யவில்லை.
அதிமுக என்கிற கட்சியும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்று நினைத்தவர் தினகரன். அப்படிப்பட்ட ஒரு நபரை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கட்சியில் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்டால் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி தினகரன், தான் செய்தது எல்லாம் தவறு. வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதம் கொடுத்தால், அந்த கடிதத்தின் மீது அதிமுக தலைமை முடிவெடுக்கும்’ என்று கூறியுள்ளார்.

அது குறித்து இன்று பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ‘முனுசாமி சொன்னது அதிமுகவின் கருத்து அல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். சசிகலா என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. தினகரனும் அதிமுகவில் இல்லை. அவர்களை மீண்டும் அதிமுக என்னும் பேரியக்கத்தில் இணைப்பது குறித்தப் பேச்சுக்கே இடமில்லை.
அதிமுகவின் சின்னத்தை முடக்கப் பார்த்தவர்கள் தினகரனும் சசிகலாவும். அப்படிப்பட்ட துரோகம் செய்தவர்களை எப்படி நாங்கள் மீண்டும் இணைத்துக் கொள்வது. சசிகலா, தினகரன் மட்டுமல்ல எந்த கொம்பன் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது’ என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.


















