இந்தியா
காஷ்மீர் பெண்கள் குறித்து பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ, 35A மூலம் நீக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. அதன் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றினார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திருணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக தனது பெரும்பான்மை பலத்தால் இந்த மசோதாவை நிறைவேற்றியது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சயினி இது தொடர்பாக சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்எல்ஏ விக்ரம் சயினி, இனிமேல் நீங்கள் காஷ்மீரை சேர்ந்த அழகான இளம்பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். பாஜக அரசின் நடவடிக்கையால் இனிமேல் கட்சி தொண்டர்கள் காஷ்மீருக்கு சென்று நிலம் வாங்கலாம் என பேசியுள்ளார். காஷ்மீர் பெண்கள் குறித்து பாஜக எம்எல்ஏ பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.













