இந்தியா
சிங்கப்பெண்ணே வருக! இராணுவ அதிகாரியானார் வீரமரணம் அடைந்த இராணுவ வீரரின் மனைவி!

இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய – சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இராணுவ அதிகாரிப் பெண்
கல்வான் மோதலில் வீர மரணம் அடைந்த வீரர்களில் தீபக் சிங்கும் ஒருவர் ஆவார். வீர மரணம் அடைந்த தீபக் சிங் அவர்களுக்கு, வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திபக் சிங்கின் மனைவியான ரேகா, இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். சென்னையில் இருக்கும் இராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார் ரேகா. இவரது பயிற்சி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இராணுவ அதிகாரியாகி உள்ளார் ரேகா.
பயிற்சிக்குப் பிறகு இராணுவ அதிகாரியாக பொறுப்பேற்ற ரேகா, கிழக்கு லடாக்கில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். இராணுவ வீரரான தனது கணவர் தீபக் சிங் வீர மரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி ரேகா இராணுவ அதிகாரியாக தேர்வாகி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவர் இறந்த பிறகு சோகத்தில் ஆழ்ந்து விடாமல், அவரது இலட்சியத்தை நிறைவேற்ற தானும் இராணுவத்தில் சேர்ந்துள்ள ரேகா அவர்கள், இந்தியப் பெண்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார். உண்மையில் இவர் தைரியம் நிறைந்த சிங்கப்பெண் தான் என்பதில் ஐயமில்லை.