தமிழ்நாடு
திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளங்கோவன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை உடனடியாக சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்து அவரது மனைவி உடன் இருந்து கவனித்து வருகிறார். இதயவியல் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் வழக்கமான பரிசோதனைக்காக அவர் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். நாளையோ, நாளை மறுதினமோ அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.