தமிழ்நாடு
மோடிக்கு கருப்புக்கொடி முடிந்தால் காட்டுங்கள்: வைகோவுக்கு சவால் விடும் பொன்னார்!

கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்ட உள்ள திட்டத்திக்கு திமுக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகள் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடியை தமிழ் நாட்டுக்குள் விடமாட்டோம், மீறி வந்தால் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என வைகோ எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பொன்னார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தமிழகம் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகள் யாரையோ திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காகவும் சொல்லி உள்ளார் வைகோ. எதுவாக இருந்தாலும் வைகோவின் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். பிரதமர் தமிழகம் வருவார், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தருவார். எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தேவையற்ற முறையில் வார்த்தைகளை கூற வேண்டாம் என நான் வைகோவுக்கு வேண்டுகோள் வைக்கிறேன் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.








