வணிகம்
மைக்ரோசாப்ட் மீண்டும் பெரும்பான்மையிலான பணிநீக்கம் – 9,000 ஊழியர்கள் பாதிப்பு!

Microsoft Layoff 2025: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2025 ஜூலை 2ஆம் தேதி, மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் உலகளாவிய ஊழியர்களில் சுமார் 9,000 பேரை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, 2014ஆம் ஆண்டு 18,000 பணியாளர்கள் நீக்கப்பட்ட பின்னர், நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.
இந்த பணிநீக்க நடவடிக்கைகள் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு குழுக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுபவமிக்க நிபுணர்களும் இந்த கட்டமைப்பு மாற்றத்தின் கீழ் பணி இழப்பை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
ஊழியர் எண்ணிக்கையில் 4% குறைப்பு
மைக்ரோசாப்ட் தனது ஊழியர் எண்ணிக்கையின் 4 சதவீதத்தினை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது நிறுவனம் புதிய நிதியாண்டை தொடங்கும் தருணத்தில், கட்டமைப்பை மாற்றும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது.
AI வளர்ச்சி – காரணமா?
மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது AI ஆராய்ச்சி மற்றும் கோடிங் அசிஸ்டன்ட் கருவிகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மேம்பட்ட டெவலப்பர் கருவிகள் மூலமாக, டெவலப்பர் பணிகள் தானாக இயங்கும் நிலையுக்கு சென்று கொண்டிருப்பதால், கோடிங் துறையில் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை குறைக்கும் போதே, மெட்டா வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது
ஒருபுறம் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கின்றன. மறுபுறம், மெட்டா போன்ற நிறுவனங்கள் திறமையான நபர்களை அதிக அளவில் பணியமர்த்தி வருகின்றன. இது தொழில்நுட்ப துறையின் வேகமான மாற்றங்களை உணர்த்துகிறது.
AI ஆராய்ச்சிக்கு அதிக முதலீடு
மைக்ரோசாப்ட், திறமையான AI ஆராய்ச்சியாளர்களை நியமிக்க 3 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நிறுவனத்தின் செலவுகளை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.














