தமிழ்நாடு
மே 5 – இன்று வணிகர் தினம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து!

இன்று மே 5 வணிகர் தினத்தையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், வணிகர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
வணிகர் தின வாழ்த்துகள்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்து செய்தியில், “வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கும், வணிக சகோதரத்தை நிலை நாட்டுவதற்கும் உருவாக்கப்பட்ட வணிகர் தினத்தை கொண்டாடும் வணிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித சமூகத்தில் உழவர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு அடுத்த நிலையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர்கள் வணிகர்கள்.
அன்னைத் தமிழ்
அன்னைத் தமிழை கடந்த காலங்களில் கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்கு கொண்டு போய் சேர்த்தவர்களும் வணிகர்கள் தான். பிற நாடுகளுக்கு தமிழை கொண்டு சென்ற வணிகர்கள், உள்நாட்டிற்கும் தமிழைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அன்னைத் தமிழை வளர்க்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வேண்டுகோளும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
அதனை நிறைவேற்றுவதற்கு, வணிகர்கள் முதலில் தங்களின் கடைகளின் பெயர்ப் பலகைகளை தனித் தமிழில் அமைக்க வேண்டும். “தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்; தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம்” என்பது தான் என் மொழி. தமிழ் வளர்த்து, நாம் வாழ்வதையும் கடந்து, வளரவும் முடியும் என்பதனால் வணிகர்கள் தமிழ்க் கடமையை நிறைவேற்ற வேண்டியதும் அவசியம் ஆகும்.
வணிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் குரல் கொடுப்பதன் மூலமாக, அனைத்து சிக்கல்களையும் தீர்த்து வணிகத்தில் வளர்ச்சி அடைய இந்த நன்னாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.