உலகம்
SB அக்கவுண்ட், டெபிட் கார்டு.. பேமெண்ட் வங்கியாக மாறுகிறதா ட்விட்டர்? எலான் மஸ்க் வேற லெவல் திட்டம்..!

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பின்னர் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.
மூன்று வகையான டிக்-களை ட்விட்டரில்அவர் அறிமுகம் செய்து ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து வருகிறார் என்பதும் அதேபோல் விளம்பர வருவாயையும் அதிகரித்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ட்விட்டரை பேமெண்ட் வங்கியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுக்கத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தின் குழுவினர் அமெரிக்கா முழுவதும் ஒழுங்குமுறை பண பரிவர்த்தனை லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து நாட்டின் முன்னணி ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு தேவையான மென்பொருளையும் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு சிறப்பு குழுவை எலான் மஸ்க் அமைத்துள்ளதாகவும் அந்த குழு ட்விட்டர் நிறுவனத்தை பேமெண்ட் வங்கியாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கையை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஆண்டுக்கு 5 பில்லியன் விளம்பர வருமானம் ட்விட்டருக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் பண பரிவர்த்தனை மூலம் மேலும் சில பில்லியன் எலான் மஸ்க் அவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை வெறும் சமூக வலைதளமாக மட்டுமின்றி பேமென்ட் வாங்கியாக மாற்றி செய்தி அனுப்புதல், பணம் அனுப்புதல், வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பயன்பாட்டை தொடங்குவதற்கான மாஸ்டர் திட்டத்தை எலான் மாஸ்க் செய்துள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனத்தின் மூலம் சேமிப்பு கணக்குகள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக இந்த திட்டத்தை அவர் அமெரிக்காவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் படிப்படியாக இந்த பேமெண்ட் வங்கி வசதி ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
எலான் மஸ்க் அவர்களின் வேற லெவல் இந்த திட்டம் ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பயனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ் அப், கூகுள் பே உள்பட பல செயல்களில் பண பரிவர்த்தனை வசதி இருக்கும் நிலையில் விரைவில் ட்விட்டரிலும் இந்த வசதி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.