தமிழ்நாடு
சென்னையில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஜோத்பூரில் இருந்து வந்த ரயிலில் 1000 கிலோ நாய் கறியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பார்சல்கள் இறக்கப்பட்டன. அப்போது சில பார்சல்களில் இருந்து அழுகிய வாடை வந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே காவல்துறை அதிகாரிகளும், உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் நடத்திய இந்த சோதனையில் 1000 கிலோ நாய் கறியை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள பல பெரிய உணவகங்களுக்கு கறி சப்ளை செய்து வரும் சென்னையை சேர்ந்த கறி கணேஷ் என்பவரின் பெயரில் இந்த 1000 கிலோ நாய் கறி பார்சல் வந்துள்ளதாக தகவல்கள் வருகிறது. மேலும் கைப்பற்றப்பட்டது நாய் கறிதான என்பதை உறுதி செய்ய மாதிரியை போலீசார் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சென்னையில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல் செய்யப்பட்டதாலும், அது பல உணவகங்களுக்கு கறி சப்ளை செய்யும் கறி கணேஷ் என்பவரது பெயரில் வந்துள்ளதாலும் சென்னையின் பல உணவகங்களில் நாய் கறி பரிமாரப்படுகிறதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்தான விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.