தமிழ்நாடு
துரைமுருகனுடன், ஸ்டாலின் அவசர ஆலோசனை: தேமுதிகவிற்கு திமுக கூட்டணியில் இடமில்லை!

தேமுதிக தற்போது அதிமுக, திமுக கூட்டணிகளில் சேர முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமைகளின் கீழ் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தது. இதில் விஜயகாந்தின் தேமுதிக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
இறுதியில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லும் என உறுதியாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தேமுதிகவை அதிமுகாவால் திருப்தி செய்ய முடியவில்லை. இதனையடுத்து தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்ல முயற்சி செய்தது. ஆனால் திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் அங்கு கூட்டணி கதவு அடைக்கப்பட்டது.
திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக தரப்பு சந்தித்து கூட்டணி குறித்து பேசியது. ஆனால் துரைமுருகன் எங்களிடம் கொடுக்க தொகுதிகள் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் கொடுத்து ஒப்பந்தமாகிவிட்டது என தேமுதிகவிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களையும் சந்தித்து விளக்கம் அளித்தார் துரைமுருகன்.
இந்த சூழ்நிலையில் கூட்டணி குறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தேமுதிக உடன் கூட்டணி வைக்கலாமா என்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பொருளாளர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியுள்ளார். துரைமுருகனுடனான இந்த ஆலோசனையில் தேமுதிகவிற்கு திமுக கூட்டணியில் இடமில்லை என ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என அறிவித்துள்ளார்.












