உலகம்
ஹவாய் தீவுக்கு தேனிலவு சென்ற தம்பதிகள்.. கப்பலை மிஸ் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

சமீபத்தில் திருமணம் ஆன தம்பதிகள் சொகுசு கப்பலில் ஹவாய் தீவுக்கு தேனிலவுக்கு சென்ற நிலையில் அந்த கப்பல் நிர்வாகிகள் அவரை தனியாக விட்டுவிட்டு கப்பலை திருப்பி வந்துவிட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அந்த தம்பதிகள் தற்போது அந்த கப்பல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
சமீபத்தில் திருமணம் ஆன தம்பதிகள் தங்கள் தேனிலவை ஹவாய் தீவில் கொண்டாட வேண்டும் என்பதற்காக சொகுசு கப்பலில் ஹவாய் தீவுக்கு சென்றனர். ஹவாய் தீவில் உள்ள ஒரு பகுதியில் அந்த கப்பலில் உள்ள அனைவரையும் இறக்கிவிட்ட கப்பல் நிர்வாகிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கப்பல் நிற்கும் என்றும் அதற்குள் அந்த பகுதியை சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என்றும் கூறியதாக தெரிகிறது.
அலெக்சாண்டர் பர்க்கிள் மற்றும் எலிசபெத் வெப்ஸ்டர் என்ற கலிபோர்னியாவை சேர்ந்த இந்த தம்பதிகள் அந்த தீவில் இறங்கி இயற்கை காட்சிகளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதி மிகவும் ரம்மியமாக இருந்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் நேரம் போனதே தெரியாமல் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென தாங்கள் வந்த கப்பல் கிளம்பிவிட்டதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கடலில் நீந்தி அந்த கப்பலை பிடிப்பதற்காக முயற்சி செய்தனர். ஆனால் இந்த கப்பல் விலகி விலகிச் சென்றதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்னர். அவர்கள் ஒருசில சமிக்ஞைகளை அனுப்பியும் கப்பல் நிர்வாகிகள் இந்த தம்பதிகளை பார்க்கவே இல்லை.
கப்பலில் எத்தனை பேர்கள் வந்தார்கள், அவர்கள் அனைவரும் மீண்டும் திரும்பி வந்து விட்டார்களா என்பதை சரி பார்க்காமல் கப்பலை கிளப்பி உள்ளார்கள் என்றும் அதனால் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நீந்த முடியாத தம்பதிகள் மீண்டும் கரைக்கே திரும்பிவிட்டனர். அவர்கள் இள வயதுடையவர்கள் என்பதால் மீண்டும் கரைக்கு நீந்தி திரும்பும் அளவிற்கு உடலில் வலிமை பெற்றிருந்தனர் என்றும் ஆனாலும் அந்த பெண் மிகவும் சோர்வாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் கரைக்கு வந்ததும் அங்குள்ள உள்ளூர் வாசிகள் அந்த ஜோடிகளை ஆதரித்து உணவு தண்ணீர் வழங்கி காப்பாற்றி உள்ளனர். அதன்பிறகு தொலைபேசியை பயன்படுத்தி கப்பல் நிர்வாகத்திற்கு போன் செய்த போது இருவரையும் கப்பல் அந்த தீவிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களுக்காக வேற ஒரு படகு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர் என்றும் இதன் காரணமாக அந்த தம்பதிகள் கப்பல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் தம்பதியின் வழக்கறிஞர் வாதாடும் போது சுற்றுலா நிறுவனம் தங்கள் விருந்தினர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடாமல் கப்பலை கிளப்பி வந்துள்ளதாகவும் அதனால் தனது கட்சிக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வாதாடியுள்ளார். இந்த வழக்கு தற்போது கலிபோனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து அந்த தம்பதிகள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது ’இது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் என்றும் ஒரு கட்டத்தில் நாங்கள் இறந்து விடுவோமோ என்று பயந்தோம் என்றோம் குறிப்பாக எனது மனைவி கரைக்கு திரும்பி நீந்தி கொண்டிருக்கும்போது மிகவும் சோர்ந்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளனர். தேனிலவுக்கு சென்ற இடத்தில் அற்புதமான அனுபவம் வேண்டும் என்பதற்காக ஹவாய் தீவுக்கு சென்றோம் என்றும் ஆனால் இப்படி ஒரு மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய பயங்கரமான அனுபவமாக இருந்தது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தனர்.