இந்தியா
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கடந்த சில ஆண்டுகளாக உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் அதன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் அதிகரிப்பு
ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் கொரோனோ பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில், தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூர் மாவட்டம் தான் தற்போது முதலிடத்தில் உள்ளது.
கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் பரவல் அதிகம் இருக்கும் காரணத்தால், 462 நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவில் 13 நபர்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள், அரசு மருத்துவமனையில் தனித் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய சிகிச்சயில் 8 பேருக்கு குணமடைந்து விட்டதால், அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இப்போது 63 நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கொரோனா தொற்று மற்றும் காய்ச்சல் அதிகரித்து வருவதால், சுமார் 30 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி கொரோனா தொற்று விகிதம் 0.61-ஐ விடவும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.