இந்தியா
இந்தியாவில் ஒரு வங்கி திவால் அடைந்தால் வாடிக்கையாளருக்கு எவ்வளவு கிடைக்கும்?

சமீபத்தில் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி உள்பட இரண்டு வங்கிகள் திடீரென திவால் ஆனது அந்நாட்டு மக்களையும் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவாதம் அளித்திருந்தாலும் வங்கி திவால் ஆனது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஒரு வங்கி திவால் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்குமா? வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான DICGC (டிபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன்), ஷெட்யூல் செய்யப்பட்ட வங்கிகளில் திறக்கப்படும் டெபாசிட்டுகளுக்கு காப்பீடு வழங்குகிறது. காப்பீட்டுத் திட்டத்தின்படி, நிலையான வைப்புத்தொகைகள், சேமிப்புக் கணக்குகள், தொடர் வைப்புத்தொகைகள் மற்றும் நடப்புக் கணக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த வங்கி வைப்புத்தொகைகள், வங்கி தோல்வியுற்றால் டெபாசிட்டருக்கு ரூ.5,00,000 வரை காப்பீடு கிடைக்கும். எனவே உங்கள் FD முதலீடுகள், சேமிப்புக் கணக்குகள் மற்றும் இதர வைப்புகளை பல வங்கிகளில் விநியோகிக்கலாம். ஆனாலும் ரூ. 5,00,000 ஐ தாண்டக்கூடாது.
எந்த வங்கிகள் DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டுள்ளன? இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளும் DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் டிஐசிஜிசியின் கீழ் இருந்தாலும், DICGC இணையதளத்தின்படி, முதன்மை கூட்டுறவு சங்கங்கள் DICGC ஆல் காப்பீடு செய்யப்படவில்லை.
உங்கள் வங்கி DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் வங்கி கிளை அதிகாரியிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை வாடிக்கையாளர்கள் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.