இந்தியா
இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும்… ராகுலுக்கு ஃபோனில் ஆதரவு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசியில் அழைத்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

#image_title
2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், குற்றம் சாட்ட வேண்டும் என்ற மனதுடன் சொல்லவில்லை என்று ராகுல் காந்தி கூறிய பின்னரும், அவர் கூறிய கருத்துக்காக தண்டிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுபோன்ற அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வரும். ராகுல் காந்தியுடன் தொலைப்பேசியில் எனது ஆதரவை தெரிவித்தேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.