கிரிக்கெட்
இங்கிலாந்து வீரர்களிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்கள் – அஷ்வின் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 – 1 என சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை சதமடித்து, 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
அவர் போட்டி முடிந்த பின்னர், வழக்கம் போல தன் யூடியூப் சேனலில், ஆட்டம் குறித்த தன் அனுபவங்களையும், பல சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
அப்படி அவர் சொன்ன ஒரு விஷயம் என்னவென்றால், ‘நான் பவுண்டரில நின்னுட்டு இருக்கேன். திடீர்னு என்னை ஒருத்தர் கூப்பிட்டு ‘வலிமை’ அப்டேட் என்ன ஆச்சுன்னு கேட்டார். எனக்கு ஒண்ணுமே தோணல. டெஸ்ட் மேட்ச் நடுவுல அப்டி கேட்டதால அதுக்கு என்னால ரிப்ளை பண்ணவே முடியல.
அப்பறம் போட்டி முடிஞ்சதும் போய் கூகுள் பண்ணி என்னனு பார்த்த அப்பறந்தான் தெரியுது. வலிமை அப்டேட் விஷயம் எந்த அளவுக்கு வைரல் ஆகியிருக்குனு.
அடுத்த நாள் என் கிட்ட மொயீன் அலி வந்து, ‘வாட் இஸ் வலிமை’ அப்டினு கேட்டாரு. அவரும் பவுண்டரில நிக்கும் போது, ஃபேன்ஸ் வலிமை அப்டேட் கேட்டிருக்காங்க’ என்று சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்தார்.
இப்படி அரசியல்வாதிகளிடமும் பொதுத் தளங்களிலும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ அப்டேட் கேட்பதற்கு, அஜித் சில நாட்களுக்கு முன்னர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.