இந்தியா
அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போது ஒரு சில தனியார் வங்கிகளில் மட்டுமே ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
தற்போது ஏடிஎம் அட்டை இன்றி யூபிஐ அடையாளத்தை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி ஐசிஐசிஐ உள்பட ஒருசில வங்கிகளில் உள்ளது. இந்த வசதி மிகவும் பாதுகாப்பானது என்றும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தும்போது குளோமிங், ஸ்கிம்மிங் உள்பட பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இந்த முறைகேட்டை தவிர்ப்பதற்காக அனைத்து வங்கிகளும் ஏடிஎம் அட்டையின்றி பணம் எடுக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார் .
வங்கி வாடிக்கையாளர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முறை உருவாக்கப்பட்டால் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் இதுகுறித்து அனைத்து வங்கிகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளிலும் இந்த வசதி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








