இந்தியா
கேரளாவில் சோகம்: மொபைல் வெடித்து சிறுமி பலி!

கேரள மாநிலத்தில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது, போன் வெடித்து சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆதித்ய ஸ்ரீ. இவருக்கு 8 வயது ஆகிறது.
செல்போன் வெடிப்பு
சிறுமி ஆதித்ய ஸ்ரீ மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடிரென மொபைல் போன் வெடித்து சிதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். சிறுமியின் உடலைப் பார்த்ததும் பெற்றோர் கதறி அழுதது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி செல்போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த நேரத்தில், போன் சார்ஜில் போடப்பட்டு இருந்துள்ளது. இந்த நேரத்தில் தான் செல்போன் வெடித்துள்ளது. செல்போன் வெடித்த சத்தமானது, அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்டுள்ளது. அந்த அளவுக்கு வெடி குண்டு வெடிப்பது போல வெடித்து சிதறி உள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழிப்புணர்வு அவசியம்
யாராக இருந்தாலும் இனி சார்ஜ் போடும் போது மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. மீறினால் ஆபத்து நமக்குத் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். குழந்தைகளுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.