உலகம்
வேலைநீக்க பட்டியலில் இணைந்த மொபைல் போன் நிறுவனம்.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 1400 ஊழியர்கள்..!

தினந்தோறும் வேலைநீக்க செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் நாளை நாம் வேலையில் இருப்போமா? என்ற அச்சத்துடனை பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து உள்ளது என்பதும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர்கள் வரை வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ericcson
ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் இந்தியா உள்பட பல நாடுகளில் தலைவிரித்தாடி வரும் நிலையில் புதிதாக வேலை நீக்க நடவடிக்கையும் இணைந்துள்ளதால் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான எரிக்ஸன் நிறுவனம் 1400 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது குறித்து எரிக்சன் நிறுவனத்தின் அதிகாரிகள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது ஸ்வீடன் நாட்டில் உள்ள கிளையில் 1400 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் சங்கங்களிடம் நடந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை மிகவும் எளிதானது அல்ல என்றும் ஆனாலும் எங்கள் ஊழியர்களை நாங்கள் மிகுந்த மரியாதை உடன் வழி அனுப்பி வைப்போம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்களை குறைத்தல் என்பது கடினமான மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஆனால் அதே நேரத்தில் நிறுவனத்தின் செலவை குறைக்க இது தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்வீடன் எரிக்ஸன் நிறுவனத்தில் 14,500 பணியாளர்கள் வேலையில் இருந்த நிலையில் தற்போது சுமார் பத்து சதவீத ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2023 ஆம் ஆண்டுக்குள் 880 மில்லியன் டாலர் செலவை குறைக்க இலக்கு வைத்துள்ளதாகவும் அதனால் மேலும் சில வேலை நீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்றும் எரிக்ஸன் நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் எரிக்ஸன் நிறுவனமும் இணைந்துள்ளது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.