தமிழ்நாடு
கரூர் துயரம்: கூட்ட நெரிசலுக்கான காரணங்கள் – போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தகவல்

கரூர்: கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திவரும் முதற்கட்ட விசாரணையில், நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் நெரிசலுக்குக் காரணமான சூழல்கள் குறித்த முக்கியத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
விசாரணையில் தெரியவந்த முக்கிய அம்சங்கள்:
நடிகர் விஜய் கரூரில் உரையாற்றுவார் என த.வெ.க. தரப்பால் 12.45 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஐந்து மணி நேர தாமதத்திற்குப் பிறகே நிகழ்விடத்திற்கு வருகை தந்தார்.
பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பைத் தாண்டியதும் திடீரென வாகனத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு உள்ளே சென்றதால், சாலை நெடுகக் காத்திருந்த மக்கள் அனைவரும், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் அவரைப் பார்க்க முடியும் என நினைத்து, ஒரே நேரத்தில் நிகழ்விடத்தை நோக்கி வந்துள்ளனர்.
இதன் காரணமாக, 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டதால், சூழல் முற்றிலும் கட்டுக்கடங்காமல் போனது. காலை முதல் கடும் வெயிலில் மக்கள் காத்திருந்த நிலையில், இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தக் கட்சியில் இருந்து போதுமான தன்னார்வலர்கள் இல்லை என்பதும், குடிநீர், மருந்து, மருத்துவக் குழு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.