சினிமா
பொன்னியின் செல்வன்2′ இசை வெளியீட்டு விழாவிற்கு வரும் விஜய்?

‘பொன்னியின் செல்வன்2’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் புரோமோஷன்களை தீவிரமாக படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி படத்திலிருந்து முதல் பாடல், ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன், குந்தவை என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எப்படி இதற்கு தயாராகின என்ற புரமோஷன் வீடியோ ஆகியவற்றை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. இதன் முதல் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் இதே போன்று, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அது போலவே இந்த பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் ரஜினி, கமல் உட்பட நடிகர் விஜய்யும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார். அதனால் ‘பொன்னியின் செல்வன்2’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பே ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இயக்குநர் மணிரத்னம் எடுக்க முயன்ற போது, அதில் நடிகர் விஜய் நடிக்க கதை சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.