தமிழ்நாடு
கோடை விடுமுறைக்கு தயார் நிலையில் 500 சிறப்பு பேருந்துகள்!

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். மேலும், பலர் கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா செல்வதும் வழக்கமான ஒன்றே தான். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, கோடை விடுமுறையை ஒட்டி, சுமார் 500 சிறப்பு பேருந்துகளை சென்னையில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
500 சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், கோடை விடுமுறை வர இருப்பதால் பொதுமக்கள் பலரும் அதிகமாக வெளியூர் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆகவே, ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல், தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.
டிக்கெட் முன்பதிவு
சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பேருந்துகளோடு, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பேருந்துகளை அதிகமாக இயக்க உள்ளோம். மேலும், http://www.tnstc.in/ என்ற இணையதளத்தின் வழியாக, டிக்கெட் முன்பதிவும் செய்து கொள்ளலாம்.
பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை இந்த முன்னேற்பாடுகளை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது போல, கோடை விடுமுறையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்குவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும், பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டண வசூலில் ஈடுபடுவதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.