மாத பலன்
அதிர்ச்சி தரப்போகும் கிரக நிகழ்வுகள் – நடக்கப் போவது என்ன?

மார்ச் 2025ல் ஆறு கிரகங்கள் மீன ராசியில் ராசி மற்றும் அம்சத்தில் ஒருங்கிணைந்து சங்கமிக்கின்றனர்.
மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம், உத்திரட்டாதி 1 முதல் 4 பாதங்கள் வரை மற்றும் ரேவதி நட்சத்திரம் 1 முதல் 4 பாதங்கள் வரை அமைந்துள்ளன.
இதில் மார்ச் 29 ல் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் நிற்க உள்ளார். அங்கு ஏற்கனவே உள்ள ராகு பகவான் அதே மார்ச் 29 ல் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்திற்கு வர உள்ளார். சுக்கிரன் மார்ச் 31 ல் புதன் ஏப்ரல் 3 ல் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் அமர உள்ளார்கள். சந்திரன் மார்ச் 28, 29, 30 ல் மீன ராசியில் இந்த கிரகங்களுடன் செல்ல உள்ளார். சூரியன் இந்த மாதம் மீன ராசியில் தான் உள்ளார். ஆக சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி, ராகு என ஆறு கிரகங்களும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து சஞ்சரிக்கும் போது அச்சமும் அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய நிகழ்வுகள் நடக்கும் என ஜோதிட சாத்திரம் கூறுகிறது.
ராகு, சனி, சுக்கிரன், புதன் ஆகியோர் கடக அம்சத்தில் நிற்கும் போது மார்ச் 28ல் சந்திரனும் கடக அம்சத்தில் நிற்க உள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக அமைகிறது. ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய் புனர்பூசம் 4ம் பாதத்திற்கு நகரும் போது கடக அம்சத்தில் நீச்சம் பெற உள்ளார். குருவும் ஏப்ரல் 10 வரை ரோகிணி 4ம் பாதத்தில் கடக அம்சத்தில் நீச்சம் பெற்று நிற்பார்.
இப்படி இவர்கள் கடக அம்சத்தில் கூட்டமாக நிற்கக்கூடிய மார்ச் 28 முதல் ஏப்ரல் 13 வரை மிகக் கடினமான கால கட்டமாக இருக்கப் போகிறது. இவ்வித கூட்டணியால் உலகமே அழிந்துவிடும் அல்லது அதற்கு ஈடான அழிவு தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடல் ராசியான மீனத்திலும் நீர் அம்சமான கடகத்திலும் அணைத்து கிரகங்களும் இருப்பதால் நீர் சம்பந்தமான பேரழிவுகள் இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனால் பெரிய அரசியல் தலைவரின் இழப்பு, மதத்தலைவரின் இழப்பு, கூட்டமான மரணம், ஆழிப்பேரலை என்கிற சுனாமி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு என்று கூறுகின்றனர்.
எனவே இந்த காலகட்டத்தில் அணைவரும் கோளறு பதிகம் பாராயணம் செய்வது மன ரீதியான பாதிப்புகளைக் குறைக்க உதவும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகின்றனர்…. இவையெல்லாம் நடக்குமா அல்லது புஸ்வாணமாகப் போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


















