வணிகம்
EPFO ஓய்வூதிய தொகை 2,500 ரூபாய் வரை உயர வாய்ப்பு – தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு!

EPFO-வின் PF ஓய்வூதிய தொகை கடந்த 11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தில் குறைவான தொகை கிடைக்கிறது. தற்போது தொழிலாளர்களுக்காக ஒரு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாதத்திற்கு ரூ.1,000 ஆக இருந்த தொழிலாளர் ஓய்வூதியம், விரைவில் ரூ.2,500 வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு, நிறுவனங்களின் பங்களிப்புகளுடன் சேர்ந்து வருங்கால வைப்பு நிதி கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது.
தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் இந்தக் கணக்கிலிருந்து PF ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 2014 முதல் இந்த தொகை மாதத்திற்கு ரூ.1,000 ஆக இருந்தது, அதனைப் பின்னர் மாற்றவில்லை.
இந்த மாற்றத்தைப்பற்றி Central Board of Trustees (CBT) நாளையும் நாளை மறுநாளும் பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளது. அந்தக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டால், ஓய்வூதிய தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதன் பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














