ஆன்மீகம்
அக்டோபர் மாத ராசி பலன்கள் 2025: ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்கள் சந்திக்கும் சவால்கள்

அக்டோபர் மாத ராசி பலன்கள் 2025
ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளால் நிரம்பியிருக்கிறது. இந்த மாதத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் நீச்சமடைந்து பலவீனமாக சஞ்சரிக்கின்றன. அதே சமயம், குரு கடக ராசியில் அதிசார உச்சமாகச் செல்கின்றார். சில ராசிகளுக்கு ராஜயோகம் உருவாகி அதிர்ஷ்ட பலன்களை அளிக்கின்ற நிலையில், ரிஷபம், துலாம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சோதனையான காலமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் உடல் மற்றும் மன ரீதியாக சவால்களை ஏற்படுத்தும். பெற்றோர்களின் உடல்நலத்தை அலட்சியம் செய்யக்கூடாது. குடும்பத்தில் சிக்கல்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள் தோன்றலாம். பொருளாதார ரீதியாக நிதி சிக்கல்கள், கடன் தேவை ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இருப்பினும், தொழில் மற்றும் வேலை ரீதியாக எந்த பெரிய இடையூறும் இருக்காது.
துலாம் (Libra)
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சாதகமற்றதாக அமையும். புதிய திட்டங்கள், முதலீடுகள் அல்லது வேலை மாறுதல்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பிரச்சினைகள் மற்றும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். தொழிலில் பெரிய லாபங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. செய்து கொண்டிருக்கும் வேலையில் பொறுமையுடன் இருக்க வேண்டும்; அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது.
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பகுதி சிரமமானதாக இருக்கும். பெண்கள் அதிகமான மன அழுத்தத்தையும் அமைதியின்மையையும் அனுபவிக்கலாம். நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களால் அவமானம் ஏற்படலாம். உடல்நல பிரச்சினைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. தொழில் மற்றும் வணிகத்தில் நிதி இழப்புகள் ஏற்படும். எனவே மகர ராசியினர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் தொழில் ரீதியான சவால்கள் அதிகம் இருக்கும். மேலதிகாரிகளுடன் சிக்கல்கள் தோன்றலாம். குடும்பத்தில், குறிப்பாக பெற்றோர்கள் தொடர்பான பிரச்சினைகள் உருவாகும். வருமானம் இருந்தாலும், திடீர் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். தம்பதியருக்குள் வாக்குவாதம் மற்றும் விரிசல் தோன்றக்கூடும். எனவே பேச்சில் கட்டுப்பாடு அவசியம்.