தொழில்நுட்பம்
2024ல் விண்டோஸ் 12 அறிமுகமாகிறதா? அப்ப விண்டோஸ் 10, 11 கதி என்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஓஎஸ் வெளியீடுகளை வெளியிட்டு வருகிறது என்றும் தற்போது விண்டோஸ் 11 நடைமுறையில் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விண்டோஸ் 12, வரும் 2024 ஆம் ஆண்டு வெளிவர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு விண்டோஸ் 11 அறிமுகம் செய்யப்பட்டது என்றும் அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விண்டோஸ் 7 என்பது நடைமுறையில் கிட்டத்தட்ட இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் விண்டோஸ் 10 மற்றும் 11 மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக விண்டோஸ் 12 குறித்த ஆய்வுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வருகிறது என்றும் 2024 ஆம் ஆண்டு விண்டோஸ் 12 அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
விண்டோஸ் 11க்கான அம்சங்களில் சில புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் ஐபோன் பயனாளர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயனாளிகள் பல்வேறு புதிய வசதிகளை பெற்றுள்ளனர் குறிப்பாக தொலைபேசி இணைப்பை ஓஎஸ் உடன் இணைக்கும் வசதி உள்ளது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் விண்டோஸ் 12ல் புதுப்புது வசதிகள் இருக்கும் என்றும் இது குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விண்டோஸ் 12 ஓஎஸ்-இல் இன்டெல்லின் Meteor Lake-S சிப்செட் Z980 எனப்படும் அம்சம் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் Z980 சிப்செட் Intel Meteor Lake மற்றும் Arrow Lake CPUகளுடன் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. Meteor Lake செயலிகள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று BenchLife அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.