இந்தியா

முடிந்தது பட்ஜெட் தயாரிக்கும் பணி.. அல்வா கிண்டுவது எப்போது?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அல்வா கிண்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது குழுவினர்களுடன் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பொது தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுதான் என்பதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு துறையிலும் என்னென்ன தேவைகள் உள்ளன? பொதுமக்கள் என்னென்ன எதிர்பார்ப்புகள் வைத்திருக்கின்றனர்? என்பதை ஆய்வு செய்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் பட்ஜெட் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து விட்டதாகவும் இதனை அடுத்து ஜனவரி 26 ஆம் தேதி அதனை கொண்டாடும் வகையில் அல்வா கிண்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைப்பார் என்றும் இதில் அவருடைய குழுவினர்களும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் தான் பட்ஜெட் அச்சிடும் பணி நடைபெறும் என்றும் அச்சிடும் பணி நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் உள்ள எந்த ஒரு தகவலும் லீக் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அச்சிடும் ஊழியர்கள் அச்சகத்தில் தங்கி விடுவார்கள் என்றும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கப்படும்போதுதான் அவர்கள் அச்சகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த ஆண்டு பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி அந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version