தமிழ்நாடு
உதயநிதி செங்கல் எடுத்து சென்று மோடியை சந்திக்க வேண்டும்: பாஜக விளாசல்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஒரு செங்கல்லை எடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என கூறி அதிரடி பிரச்சாரம் செய்தார். அதே பாணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒத்த செங்கலை காண்பித்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் நேற்று பிரதமரை சந்தித்த உதயநிதியை இந்த செங்கல் விவகாரத்தை முன்வைத்து விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

#image_title
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசு முறை பயனமாக டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, தமிழகம் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நீட் தேர்வு விவகாரம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது போன்ற பல கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக ஊடகங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் பாஜகவின் தமிழக மாநில துணைத்தலைவரும் மூத்த பாஜக தலைவருமான நாராயணன் திருப்பதி உதயநிதி ஸ்டாலின் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில், உதயநிதிக்கு உண்மையில் தைரியம் இருந்திருந்தால், திருடிய செங்கல்லை எடுத்து சென்று பிரதமரை சந்தித்திருக்க வேண்டும்! ‘வாய் சொல்லில் வீரரடி’ என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.