கிரிக்கெட்
கடைசி பந்தில் த்ரில் வெற்றி: சென்னையை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினர்.
சென்னை 200 ரன்கள்
முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 37 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து கான்வேயுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். துபே 28 ரன்களும், அடுத்து களம் இறங்கிய மொயீன் அலி 10 ரன்களும், ஜடேஜா 12 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்சர்களை பறக்க விட்டார் கேப்டன் தோனி. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் த்ரில் வெற்றி
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரம்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய ப்ரம்சிம்ரன் சிங் 42 ரன்களும், தவான் 28 ரன்களும், அடுத்து களம் இறங்கிய அதர்வா 13 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இதையடுத்து லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் சாம் கரண் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் 3 சிக்சர் அடித்து அசத்திய நிலையில், அதே ஓவரில் கேட்ச் கொடுத்து 40 ரன்களுக்கு அவுட் ஆனார்.
சாம் கர்ரண் 29 ரன்களும், ஜிதேஷ் சர்மா 21 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இறுதியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது, சிக்கந்தர் ராஸா 3 ரன்களை ஓடி எடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.