கிரிக்கெட்

மூன்றாவது டெஸ்ட்: 47 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா! 156/4

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது.

#image_title

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் பேட்டிங் இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. 27 ரன்னில் முதல் விக்கெட்டாக ரோகித் ஷர்மா வெளியேற அடுத்தடுத்து ஆட்டம் காண ஆரம்பித்தது இந்திய அணியின் பேட்டிங் வரிசை. இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க எந்த வீரராலும் முடியவில்லை. சீரான இடைவெளியில் இந்திய விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வீழ்த்திக்கொண்டே இருந்தனர்.

இறுதியாக இந்திய அணி 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 22, ஷுப்மன் கில் 21 ரன்களை எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ட்ரேவிஸ் ஹெட் சொதப்பினாலும் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 156 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இன்னும் நான்கு நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத ஒன்றே. இருப்பினும் இந்தியாவை விட ஆஸ்திரேலியா சற்று முன்னோக்கியே உள்ளது.

Trending

Exit mobile version