இந்தியா
முதலையுடன் போராடி கணவரை காப்பாற்றிய பெண்: குவியும் பாராட்டு!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலையிடம் சிக்கிய தனது கணவரின் உயிரை, போராடி மீட்ட பெண்ணின் வீரச்செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள மந்தராயல் பகுதியில் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் பன்னே சிங்.
ஆற்றில் முதலை
கடந்த செவ்வாய் கிழமையன்று பன்னே சிங்கும், அவரது மனைவியுமான விமல் பாயும் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கும் போது அதிலிருந்த முதலை, பன்னே சிங்கின் காலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து விட்டது. அப்போது அவருடைய மனைவி விமல் பாய், உடனடியாக அருகில் இருந்த குச்சியை எடுத்து முதலையை அடித்துள்ளார். இருப்பினும் முதலை விடவில்லை. மெல்ல மெல்ல தண்ணீருக்குள் உடலை இழுத்து சென்றது.
போராடி மீட்ட மனைவி
விமல் பாய் அவர்கள் மிகவும் தைரியமாக முதலையின் கண்ணில் குச்சியால் தாக்கியுள்ளார். இதன் காரணமாக முதலை தனது பிடியை விட்டு, பன்னே சிங்கின் காலை விடுவித்தது. பின் கணவனை ஆற்றுக்குள் இருந்து இழுத்து மீட்டு கரை சேர்ந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்த ஆட்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு விமல் பாய் பேசிய வீடியோ ட்விட்டரில் வைரலாகி உள்ளது. அதில் “என் கணவரை முதலை கடித்த போது, நான் என் வாழ்க்கையைப் பற்றி துளியும் சிந்திக்கவில்லை” என விமல் பாய் தெரிவித்துள்ளார். மேலும் இவரது வீர தீரச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமல் பாயின் சாகசத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.