சினிமா
’வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் கன்னியாகுமரியில் தொடங்கியது!

‘வணங்கான்’ படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘வணங்கான்’ படம் தொடங்கப்பட்டது. ஆனால், இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தத் திரைப்படம் கைவிடப்பட்டது. நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார்.
நடிகர் சூர்யாதான் விலகினாரே தவிர இந்தப் படம் முற்றிலுமாக கைவிடப்படவில்லை என்பதை இயக்குநர் பாலா தரப்பு உறுதி செய்தது. சூர்யாவுக்குப் பதிலாக இந்தப் படத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் ‘வணங்கான்’ படத்திற்கான டெஸ்ட் லுக் அருண் விஜய்க்கு செய்யப்பட்ட நிலையில், தற்போது கன்னியாகுமரியில் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது.
ஸ்டண்ட் சிவா கன்னியாகுமரியில் இருந்து படப்பிடிப்பின் தளத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார். கன்னியாகுமரியில் இதன் முதல் ஷெட்யூல் கிட்டத்தட்ட 25 நாட்கள் நடைபெற இருக்கிறது. கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கீர்த்தி ஷெட்டியும் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அருண் விஜய்யின் முதல் பார்வையுடன் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.