தமிழ்நாடு
மத்திய அரசின் அழுத்தம் தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்: அமைச்சர் செந்தில் பாலாஜி!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை எனில் கடன் வழங்கப்படமாட்டாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான 3 ஆம் நாள் விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு கோடி மக்களுக்கு 0% எனும் நிலையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை என்றால் கடன் வழங்கப்படாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. கோடை காலத்தில் எவ்விதமான மின்சார பாதிப்பும் ஏற்படாத வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மின்சார உற்பத்தியை பெருக்க கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
மும்முனை மின்சாரம்
விவசாயிகளுக்கு இப்போது இருக்கும் 18 மணி நேர மும்முனை மின்சாரம், இனி வரும் காலத்தில் 24 மணி நேரமாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வோம். மலைப் பகுதியில் உள்ள உயர் கம்பிகளை, புதைவட கம்பியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பவானிசாகர் தொகுதியில் உள்ள ஆச்சனூரில் துணை மின் நிலையங்கள் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுமார் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.