கிரிக்கெட்

சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரோகித் சர்மா 29 ரன்களும், இஷான் கிஷன் 31 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 20வது ஓவரின் கடைசி பந்தில் சதம் அடித்து அசத்தினார். 103 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார். வதேரா 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய விஷ்னு வினோத் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 2 ரன் மற்றும் சுப்மன் கில் 6 ரன் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 29 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும், ராகுல் தெவாட்டியா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ரஷித்கான் அதிரடி

கடைசியில் ரஷித் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இவர் 32 பந்துகளை சந்தித்து 10 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 9வது விக்கெட்டுக்கு ரஷித் கான் மற்றும் அல்ஜாரி ஜோசப் ஜோடி 88 ரன்களை குவித்தது. முடிவில் 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியைப் பெற்றது. மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Trending

Exit mobile version