இந்தியா
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நடு வானில் மோதிக்கொண்டதை அடுத்து விமானி ஒருவர் பலியானதாகவும் மேலும் இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் என்ற பகுதியில் திடீரென நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சுகாய் 30 என்ற விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் படுகாயம் அடைந்த நிலையில் மிராஜ் 2000 என்ற விமானத்தில் இருந்த விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரண்டு விமானங்களும் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய நிலையில் திடீரென ஏற்பட்ட இடுபாடுகள் காரணமாக நடுவானில் மோதிக்கொண்டதாகவும் இந்த நிகழ்வு அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடந்துள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக நடைபெறும் பயிற்சிதான் இன்று காலையும் நடந்தது என்றும் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு ஜெட் விமானங்களும் அதிவேக போர் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது மோதி இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச மாநிலம் முதலமைச்சர் சிவராஜ் சிங் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான செய்தி அடைந்து வருத்தமடைந்தேன். மீட்பு பணியில் ஒத்துழைக்க மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், விமானிகள் பத்திரமாக இருக்க நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.