தமிழ்நாடு
சீமான் சர்ச்சை பேச்சு: நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது ஆதிதமிழர் பேரைவையினர் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்கியுள்ளனர்.

#image_title
அருந்ததியர் மக்களின் வரலாற்றை அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசிய சீமானின் பரப்புரைக்கு அப்போதே தடைவிதிக்க தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர் ஆதிதமிழர் பேரவையை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இன்று சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர் ஆதிதமிழர் பேரவையினர்.
சென்னை போரூரில் 200க்கு மேற்பட்ட ஆதிதமிழர் பேரவையினர் நாம் தமிழர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், ஆதிதமிழர் பேரவையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆதிதமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை கல், பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்தி ஆதிதமிழர் பேரவையினரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.