தமிழ்நாடு
குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் திமுக: சசிகலா காட்டம்!

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வியை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் நான் தான் என உரிமை கொண்டாடிவரும் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக நேரடியாக தேர்தலில் மோதாமல் காங்கிரஸ் கட்சியை விட்டு ஆழம் பார்ப்பதாக விமர்சித்துள்ளார்.

#image_title
சசிகலா வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது ஜனநாயக முறையில் நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது. இது மக்களை ஏமாற்றி, எதிர்க்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது.
அதிமுக இன்றைக்கு இருக்கும் நிலைமையை பயன்படுத்தி கொண்டு திமுக அதில் குளிர் காய்வதால் பெற்ற வெற்றியாகத் தான் பார்க்க முடிகிறது. திமுக தனது 22 மாத கால ஆட்சியின் அவலங்களை மனதில் வைத்துக்கொண்டு நேரடியாக போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதை நன்கு உணர்ந்து, “குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்” கதையாக தனது கூட்டணி கட்சியை நிற்க வைத்து தப்பித்துவிட்டது.
திமுகவினர் எதிர்க்கட்சியினரை வலுவிழக்க செய்து அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு நம் இயக்கத்தின் பிளவை பயன்படுத்தி கொண்டு ஒன்றிணையாமல் பார்த்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். நம் இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் இதை எல்லாம் கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக, கோடான கோடி தொண்டர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் அதிமுக இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். திமுக கூட்டணி படுமோசமாக தோல்வியை தழுவி இருக்கும் என தெரிவித்துள்ள சசிகலா வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிடுவோம் என நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த அறிக்கையில்.