சினிமா செய்திகள்
விராட் கோலி பயோபிக்கில் ராம்சரன்?

நடிகர் ராம்சரண், கிரிக்கெட் வீரர் விராட் கோலியை போல தானும் இருப்பதாக கூறியுள்ளார்.
சினிமாவில் பயோபிக் காலம் இது. பல விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக உருவாகி அதுவும் மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் சிறிது நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை, பயோபிக்காக வர இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ராம்சரணிடம் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா என கேட்கப்பட்டது.
இதற்கு ராம்சரண் பதில் அளித்துள்ளதாவது, “எனக்கு இதுபோன்ற பயோ பிக்சரில் நடிப்பதற்கு ஆர்வம் அதிகம். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் பயோபிக்கில் நடிக்க மிகவும் விரும்புகிறேன். ஒருவேளை, விராட் கோலியின் பயோபிக்கில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தால் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். அவர் மிகவும் உற்சாகமான நபர்.
அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது அருமையான ஒரு விஷயம். மேலும், தோற்றத்தில் ஓரளவு அவரைப் போல நானும் இருப்பதால் நிச்சயம் இந்த வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்வேன்” என பதிலளித்துள்ளார்.
ராம்சரண் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு ஆஸ்கர் விருது வென்றதை அடுத்து, தற்பொழுது ஷங்கர் படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பி உள்ளார். அங்கு அவருக்கு ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு பிரபுதேவா நடனக்குழு நடனம் ஆடி உற்சாக வரவேற்பு கொடுத்தது. மேலும், விரைவில் ஹாலிவுட் படத்தில் ராம்சரண் நடிக்க இருப்பதாகவும் தன்னுடைய சமீபத்திய நேர்காணலில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.