சினிமா செய்திகள்
ரஜினிகாந்த்தின் படம், குரல் அல்லது கேலிச்சித்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தத் தடை.. மீறினால் நடவடிக்கை!

நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படம், குரல் அல்லது கேலிச்சித்திரம் போன்றவற்றை அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது அனுமதியின்றி தனது பெயர், படம், குரல் அல்லது கேலிச்சித்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
அனுமதி இல்லாமல் அவற்றைப் பயன்படுத்தினால் ஆளுமை உரிமைகள் சட்டத்தின் படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனது ஆளுமையை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நபர் தான் மட்டுமே என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் என்ற அவரது ஆளுமையை அனுமதியின்றி பலர் வணிக ரீதியாகப் பயன்படுத்தி ஆதாயம் காண்கின்றனர். மேலும் இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பிறர் குழப்பம் அடைகின்றனர். இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.
ஆனால் ரஜினிகாந்த்தின் இந்த அறிக்கையைப் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.