கிரிக்கெட்

சாம்சன், ஹெட்மயர் அதிரடியால் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி!

Published

on

16 வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில், அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 23 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களளைச் சேர்த்தது. பின்னர் 178 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

வித்தியாசமான கேட்ச்

இப்போட்டியில் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அப்போது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை பவுண்டரிக்கு ஓட விட்ட சஹா (4 ரன்) அடுத்த பந்தை தூக்கி அடிக்க முற்பட்டார். ஆனால், பந்து பேட்டின் விளிம்பில் பட்டு தலைக்கு மேலே எழும்பியது. ஒரே நேரத்தில் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான சஞ்சு சாம்சன், ஹெட்மயர் மற்றும் ஜூரெல் ஆகியோர் கேட்ச் செய்ய முயன்று, முட்டி மோதிக் கொண்டனர்.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக சாம்சனின் கையில் பட்டு எகிறிய பந்தை அருகில் நின்றிருந்த டிரென்ட் பவுல்ட் கேட்ச் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version