கிரிக்கெட்

ஆஸி.,யின் ‘கேம் பிளானை’ சுக்குநூறாக்கியது எப்படி? – வரலாற்று வெற்றி குறித்து புஜாரா சொன்ன குட்டி ஸ்டோரி

Published

on

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் செத்தேஸ்வர் புஜாரா.

அவர் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தின் போது, 200 பந்துகளுக்கு மேல் பிடித்து, அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் புஜாராவின் பேட்டிங்கை மின்னல் வேகப் பந்து வீச்சால் சோதித்தனர். இருப்பினும் அசராமல் நின்ற புஜாரா, ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்களின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கினார்.

அவரது தடுப்பாட்டம் பலரால் பாராட்டப்பட்டது. ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தியது எப்படி என்பது குறித்து புஜாரா மனம் திறந்து பேசியுள்ளார்.

‘ஆஸ்திரேலிய பவுலர்களை சாதாரணமாக எண்ணவிடக் கூடாது. அவர்கள் உங்களின் பேட்டிங்கை வீடியோக்கள் மூலம் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள். அதை வைத்து உங்களுக்கு எதிரான திட்டங்களைப் போடுவார்கள். அந்தத் திட்டத்தை உடைக்க உங்களுக்கு மிக அதிக பொறுமை வேண்டும். அவர்களின் கேம் பிளானை உடைக்க உங்களுக்கு தனியான திட்டங்கள் அவசியம். அதைத் தான் நாங்கள் இந்த தொடரில் செய்தோம்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள், கொஞ்சம் அசந்தாலும் விக்கெட்டுகளை சாய்த்து விடுவார்கள். களத்தில் பாதகமான நிலை இருக்கும் போது, விக்கெட்டுகளை தூக்கியெறிந்துவிடக் கூடாது. டாப் ஆர்டரில் யாராவது மிக நீண்ட இன்னிங்ஸை விளையாடும் போது, அடுத்து வருபவர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும். அதைத் தான் நான் செய்தேன்’ என்று பெருமிதத்தோடு பேசினார்.

4வது டெஸ்டில் புஜாராவின் விக்கெட்டைச் சாய்க்க பவுன்சர்களால் நோகடித்தனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். அதை அனைத்தையும் சமாளித்தார் புஜாரா. அவருக்கு அந்தப் போட்டியால் மட்டும் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டன.

 

Trending

Exit mobile version