சினிமா
’பத்து தல’ சிம்பு: ‘வெந்து தணிந்தது காடு2’ நடக்குமா எனத் தெரியவில்லை!

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று கமலா திரையரங்கில் நடந்தது. இதில் நடிகர் சிலம்பரசன் பேசியதாவது, “அன்று இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்தித்தேன்.
பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் சந்திக்க முடியவில்லை என்பதால், இன்று இங்கு வந்தேன். சிம்பு வரமாட்டேன் என்றெல்லாம் தகவல் வந்தது. அப்படி எல்லாம் இல்லை. மேடையில், அன்று கெளதம் மேனன் சார் பற்றி மேடயில் பேச மறந்துவிட்டேன். எனக்குத் தெரிந்து ‘விடிகே2’ பண்ண முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இப்போது வரும் பல படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
’பத்து தல’ வந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அது அதிகமாகும். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பல நடிகர்கள் இருக்கிறபோது எப்படி அவர்களை சமாளிக்கப் போகிறார் இயக்குநர் என்ற கேள்வி இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு இத்தனை நடிகர்களுக்கு சரியான இடம் கொடுத்து, இயக்குநர் கிருஷ்ணா
இந்தப் படத்தை முடித்திருக்கிறார். ’பத்து தல’ படம் நான் ஒத்துக் கொள்ள முக்கியக் காரணம் கெளதம் கார்த்திக்தான். எந்தவிதமான கஷ்டத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்வார். அந்த குணத்துக்காகவே அவர் பெரிய இடம் அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார் சிம்பு.