இந்தியா
இந்தியாவின் முன்னணி வங்கியும் திவாலா? பதறியபடி விளக்கம் அளித்த நிர்வாகம்..!

அமெரிக்காவில் உள்ள சிலிகான் வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த வங்கி ஒன்றும் திவால் ஆனதாக வதந்தி பரவியதை அடுத்து அந்த வங்கிக்கு நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி என்று கூறப்படும் எஸ்விபி வங்கி, வைப்புத்தொகை இருப்பு குறைந்ததால் திவால் ஆகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் இந்த நெருக்கடியில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் எஸ்விபி வங்கி திவால் குறித்த செய்தி இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பையைச் சேர்ந்த எஸ்விசி என்ற வங்கிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எஸ்விபி வங்கி திவால் அடைந்ததாக செய்திகள் வெளியானதை பலர் தவறாக எஸ்விசி வங்கி தான் திவால் ஆகிவிட்டது என்று தவறாக புரிந்து கொண்டனர். இதை வைத்து ஒரு சிலர் வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட நிலையில் பதறியபடி எஸ்விசி வங்கி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் எஸ்விசி வங்கி 100 ஆண்டு பாரம்பரியமிக்க வங்கி என்றும் இந்தியாவில் மட்டுமே இந்த வங்கி செயல்படுகிறது என்றும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இதற்கு கிளைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது திவால் ஆகி இருப்பது அமெரிக்காவை சேர்ந்த எஸ்விபி வங்கி என்றும் அந்த வங்கிக்கும் எங்கள் எஸ்விசி வங்கிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் எஸ்விசி வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தவறாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் எங்கள் வங்கி நம்பிக்கையான வங்கி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான புரிதல் காரணமாக ஏராளமான எஸ்விசி வங்கி வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தை அவசர அவசரமாக எடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியான பின்னரே வாடிக்கையாளர்கள் நிம்மதியை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.