கிரிக்கெட்
ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. 108 ஆண்டு கால சாதனையை இழந்த இங்கிலாந்து..!

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. ஜோ ரூட் 153 ரன்களும் ஹாரி புரூக் 186 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூஸிலாந்த அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்து மீண்டும் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 483 ரன்கள் எடுத்தது என்பதும் வில்லியம்சன் அபாரமாக விளையாடிய 132 ரன்கள் அடித்தார் என்பதும் ப்ளெண்டில் 90 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 108 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிநாட்டில் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளை வென்ற சாதனை நிகழ்த்தும் என்றும் கூறப்பட்டது. நேற்றைய ஆட்டநேரம் முடிவில் 48 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து நிச்சயம் இலக்கை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 256 ரன்களில் ஆட்டம் இழந்ததை அடுத்து ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
146 ஆண்டு கால டெஸ்ட் விளையாட்டில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இரண்டே இரண்டு முறை தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்திய அணி வீழ்த்திய நிலையில் தற்போது நேற்றுதான் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.