காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் பொதுமக்கள் வசதிக்காக திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை காய்கறி விலை விண்ணை தொட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு கிலோ 80 ரூபாயும், கத்தரிக்காய் 60 ரூபாயும், வெங்காயம் 70 ரூபாயும் தக்காளி 50 ரூபாயும் விற்பனையாகி வருவதாகவும் நேற்று முன்தினம் வரை இந்த விலையில் இருந்து பாதிக்கும் குறைவாக விற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் இருமடங்கு மும்மடங்கு விலை ஏறி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்திற்கு காய்கறி கடை இருக்காது என்பதால் ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி வருவதால் காய்கறிகளின் தேவை அதிகமானதை அடுத்து விலை ஏறி உள்ளதாகவும் அதே நேரத்தில் வரத்து குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு காய்கறி வியாபாரிகளுக்கு சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகளை சரியான விலைக்கு மட்டுமே எடுக்க வேண்டுமென்றும் செயற்கையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. சரியான விலைக்கு காய்கறி விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து காய்கறி விலை மீண்டும் சீராகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com