ஒருவாரம் காய்கறி, மளிகை கடையை திறக்க அனுமதிக்காததற்கு கடும் எதிர்ப்பு!

ஒருவாரம் காய்கறி, மளிகை கடையை திறக்க அனுமதிக்காததற்கு கடும் எதிர்ப்பு!

வரும் திங்கள் முதல் ஊரடங்கு ஒரு வாரத்துக்கு மீண்டும் நீடிக்கப்படுவதாகவும் அந்த ஒரு வாரத்தில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் கூட திறப்பதற்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காய்கறி கடைகளையும், மளிகை கடைகளிலும் குறைந்தபட்ச நேரம்கூட திறக்காமல் ஒரு வாரத்திற்கு பூட்டி வைத்தால் சாமானிய மக்கள் மற்றும் அன்றாடம் காய்ச்சிகள் நிலை என்ன என்றும் குளிர்பதனப் பெட்டி இல்லாத குடும்பங்கள் இந்த இரண்டு நாட்களில் ஒரு வாரத்திற்கான பொருட்களை வாங்கி விட முடியுமா? அப்படியே வாங்கினாலும் சேமிக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மளிகை கடையும் காய்கறி கடையும் தேவை இல்லை, ஆனால் சாமானிய மக்களுக்கு கண்டிப்பாக இந்த இரண்டும் தேவை. எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை எப்படி தமிழ்நாடு முழுவதும் தோட்டக்கலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகம் செய்ய முடியும் என்றும்ம் அது சாத்தியமில்லை என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். மளிகை கடைகள் ஒருவாரம் மூடப்பட்டால் அனைத்து குடும்பங்களும் ஒரே நேரத்தில் மளிகை பொருட்களை வாங்கிவிட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலும் பால் விற்பனை சிறிய மளிகை கடைகள் மூலம் தான் நடந்து வருகிறது, அரசின் பால் விற்பனை கூடங்கள் அனைத்து இடங்களிலும் இல்லை. எனவே பால் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எப்படி சமாளிக்க முடியும்? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

எனவே குறைந்தபட்சம் ஒருநாள் விட்டு ஒரு நாளாவது காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இதனை அரசு கவனத்தில் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com