போலீசை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் ஜாமீன் மனு: நீதிபதிகள் கூறிய கடுமையான வார்த்தைகள்!

போலீசை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் ஜாமீன் மனு: நீதிபதிகள் கூறிய கடுமையான வார்த்தைகள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் உடன் ஒருமையில் பேசி கடுமையாக நடந்து கொண்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கடுமையான வார்த்தைகள் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக காரில் வந்த ப்ரீத்தி ராஜன் என்பவர் இபதிவு இல்லாமல் ஊரடங்கு விதிகளை மீறி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ப்ரித்திக்கு போலீசார் அபராதம் விதித்தனர். உடனே ப்ரீத்தி ராஜன் தன் தாயாரான வழக்கறிஞர் தனுஜாவை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியதை அடுத்து வழக்கறிஞர் தனுஜா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போலீசார் அளித்த அபராத ரசீதை தூக்கி எறிந்தார். மேலும் போலீசாரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று தனுஜா ஒருமையில் பேசினார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து வழக்கறிஞர் தனுஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த நிலையில் தனுஜா மற்றும் அவரது மகள் ப்ரீத்தி ராஜன் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து தங்களுக்கு முன் ஜாமீன் வேண்டும் என சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தனுஜா மற்றும் அவரது மகள் பிரீதி ராஜன் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனு மீது விசாரணை நேற்று நடைபெற்ற போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் என்றும் அதனால் தனுஜா மற்றும் அவரது மகளுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வகுமார் இதுபோன்ற சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com