பிரச்னை இருக்கும்வரை மய்யத்தின் தேவையும் இருக்கும்: கமல்ஹாசன் டுவிட்!
கலக்கத்தில் கமல்ஹாசன்

பிரச்னை இருக்கும்வரை மய்யத்தின் தேவையும் இருக்கும்: கமல்ஹாசன் டுவிட்!

பிரச்சனை இருக்கும் வரை மய்யத்தின் தேவை இருக்கும் என்று கமல்ஹாசன் பதிவு செய்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நான்கு நிமிட வீடியோவை வெளியிட்ட கமல் ஹாசன் உருமாறிய மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செயல்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை அரசியலில் தொடர்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ’நம்மவர் பார்வைக்கு....

இராமநாதபுர மாவட்டம் பரமக்குடி வட்டம் கமுதக்குடி கிராமத்தில் இரயில்வே சுரங்கப்பாதை இல்லாமல் மக்கள் துன்புற்றதால்....மதுரை உயர்நீதி மன்றத்தில் என்னால் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பெற்று சுரங்கப்பாதை அமைத்த தர தீர்ப்பை பெற்றேன்’என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன் கூறியதாவது: மய்யம் தன் பயணத்தைத் தொடரும் என்றேன். இதோ, மதுரை உயர்நீதி மன்றத்தில் நம் மய்யத் தொண்டர் குரு.சரவணன் தொடர்ந்த பொதுநல வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பாகியிருக்கிறது. பிரச்னை இருக்கும்வரை மய்யத்தின் தேவையும் இருக்கும் என்று காட்டியிருக்கிறார் சரவணன். வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com