தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த அருணா ஜெகதீசன்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த அருணா ஜெகதீசன்!

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமனம் செய்யப்பட்ட விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் சற்று முன்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட போராட்டம் நடத்தப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மேல் நடந்த இந்த போராட்டத்தின் போது 100வது நாளில் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது என்பதும், அதில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரணை செய்வதற்காக அன்றைய தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்த விசாரணையை அடுத்து தற்போது விசாரணை ஆணையர் அருணா ஜெகதீசன் அவர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com