ஆவின் பால் பாக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் நாசர் அதிரடி!

பால் விலையைக் குறைத்து தமிழக மக்களின் வயிற்றில் முதல்வர் ஸ்டாலின் பால் வார்த்துள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் நாசர் அதிரடி!

ஆவின் பால் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஆவின் பால் பாக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

நந்தனம் ஆவின் பால் நிறுவனத்தில் பால் விலை குறைப்பு விழாவில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர், “பால் விலையைக் குறைத்து தமிழக மக்களின் வயிற்றில் முதல்வர் ஸ்டாலின் பால் வார்த்துள்ளார். அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் ஆவின் பால் விற்பனை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கர்நாடகாவின் நந்தினி மற்றும் குஜராத்தின் அமுல் பால் பொருட்கள் இப்படி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் ஆவின் பால் நீலம் நிறப் பாக்கெட் ஒரு லிட்டர் 40 ரூபாய்க்கும், பச்சை பாக்கெட் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கும், ஆரஞ்சு நிறம் ஒரு லிட்டர் 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீல நிறம் ஆவின் பால் பாக்கெட்

ஆவின் நீலம் நிறப் பால் பாக்கெட் toned milk (சமன்படுத்திய பால்) என அழைக்கப்படுகிறது. 500 மில்லி லிட்டர் நீலம் நிற பால் பாக்கெட் விலை 21.50 ரூபாயிலிருந்து 1.50 ரூபாய் குறைத்து 20 ரூபாய் என விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ஆவின் பால் கார்டு வாங்கினால் 18.50 ரூபாய்க்கு 500 மிலி பால் கிடைக்கும்.

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்

இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் என்றும் கூறுகின்றனர். 500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட் விலை 24 ரூபாயில் இருந்து 22 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட்

இது ஒரு இருநிலை சமன்படுத்திய பால் பாக்கெட். குறைந்த கொழுப்பு இருக்கும். மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட் 500 மிலி 18.50 ரூபாய்க்கு கிடைக்கும்.

ஆவின் பால் கார்டு சந்த விலை குறைப்பு (500 மிலி)

30 நாட்களுக்கான நீல நிறம் ஆவின் பால் பாக்கெட் சந்தா 555 ரூபாய். பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் மாத கார்டு சந்தா 630 ரூபாய்.பழுப்பு நிற பால் பாக்கெட் சந்தா 690 ரூபாய். மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட் மாத கார்டு 540 ரூபாய்.

அரசுக்கு கூடுதல் செலவு

ஆவின் பால் விலையை தமிழக அரசு குறைத்துள்ளதால், அரசுக்கு ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பால் விலை குறைப்பு மே 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com